கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலவும் மர்ம நோய் காரணமாக கடந்த 2 மாதங்களில் மட்டும் 123 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த 123 குழந்தைகளில், 115 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த புதன்கிழமை (மார்ச்.8) இரவில் மட்டும் அடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்பு விவகாரத்தில் மாநில அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி உள்ள எதிர்க்கட்சிகள், இது தொடர்பாக சட்டப் பேரவையைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதேநேரம் மேற்கு வங்கம் மாநில தலைநகரான கொல்கத்தாவில் மட்டும் தான் அதிகபட்ச குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் உள்ள பி சி ராய் மருத்துவமனையில் உட்சபட்ச குழந்தைகள் இறப்பு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த மருத்துவமனையில் மட்டும் 50 குழந்தை உயிரிழந்ததாக கூறப்பட்டு உள்ளது. மேலும் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் 20 குழந்தைகளும், ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் 28 குழந்தைகளும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தராஞ்சன் சிஷூ சதான் மருத்துவமனையில் 10 குழந்தைகளும் மற்றொரு அரசு மருத்துவமனையான குழந்தைகள் நல கழகத்தில் 7 பேரும் உயிரிழந்ததாக கூறப்பட்டு உள்ளது.