மும்பை: 2023-24ஆம் நிதியாண்டிற்கான இரண்டாவது இருமாத நாணயக் கொள்கை கூட்டம் கடந்த 6ஆம் தேதி தொடங்கி இன்று(ஜூன் 8) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும். மத்திய நிதிக் கொள்கைக் குழு (MPC - Monetary Policy Committee) ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த அறிவிப்பு உள்ளது.
நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் அதேநேரம் பணவீக்கம் படிப்படியாக சீரமைக்கப்படுவதை உறுதி செய்யவும் மத்திய நிதிக் கொள்கைக் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
மொத்த பணவீக்கத்தின் இலக்கான 4 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் பணவீக்கம் அப்படியே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2024ஆம் நிதியாண்டிற்கான சில்லறை பணவீக்கத்தை 5.2 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதையும் படிங்க: 2000 ரூபாய் நோட்டை வாங்குவதை மறுக்கக் கூடாது - கடைகளுக்கு RBI கவர்னர் வேண்டுகோள்
கடந்த இரண்டு நிதியாண்டுகளாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான (Consumer price index -CPI) பணவீக்கம், 5.7 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் குறைந்துள்ளது.
உள்நாட்டு தேவை நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும். மூன்றாம் காலாண்டில் 6 சதவீதமாகவும், 4ஆம் காலாண்டில் 5.7 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்திய ரூபாய் நிலையானதாக உள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நான்காம் காலாண்டில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது சிறப்பாக நிர்வகிக்கக் கூடியதாக உள்ளது. ரிசர்வ் வங்கி அதன் நிர்வாகத்தில் சுறுசுறுப்பாக இருக்கும், அதே நேரத்தில் பொருளாதாரத்தின் உற்பத்தித் தேவைகளுக்கு போதுமான நிதி ஆதாரங்களை உறுதி செய்யும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 21 நாடுகளுக்கு ஏஞ்சல் வரி விலக்கு; சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகள் அதிர்ச்சி!