டெல்லி:நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ ஒன்று கடந்த (நவ.3) வெள்ளிக்கிழமை சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது. இதனையடுத்து இந்த வீடியோ பதிவு குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது வருத்தத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனையடுத்து பல்வேறு நடிகர்கள், நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக தங்களது பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யத் தொடங்கினர்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவிக்கும் போது நரேந்திர மோடி அரசு 2023 சட்டத்தின் படி இது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்துள்ளதாகவும். மேலும், ஒவ்வொரு பதிவுகளையும் குறிப்பிட்ட தளங்களே முழு பொறுப்பு எனத் தெரிவித்தார்.
இது போன்ற மார்பிங் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் மார்பிங் மற்றும் போலி வீடியோக்கள் குறித்த புகார்கள் தெரிவிக்கப்பட்டால் 24 மணி நேரத்தில் அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ விவகாரம்; டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!
இதனையடுத்து, ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையத்தின் (Delhi Commission for Women) தலைவர் ஸ்வாதி மலிவால், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டு எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, தற்போது ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ தொடர்பாக டெல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ஐபிசி 465 மற்றும் 469 பிரிவுகளிலும் ஐடி சட்டப்பிரிவு 66சி மற்றும் 66ஈ ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வீடியோ பதிவிட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த வழக்கைச் சிறப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தீபாவளிக்கு செம்ம க்யூட்டா எப்படி ரெடி ஆகலாம்: முகத்துக்கும், கூந்தலுக்கும் இதை ட்ரை பண்ணுங்க.!