பெங்களூரு(கர்நாடகா): ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு தென்னிந்தியாவின் சிறந்த விருந்தோம்பலுக்கான 'சிஹாரா விருது' நேற்று(நவ.18) வழங்கப்பட்டது.
இந்த விருதை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வழங்க, ராமோஜி ஃபிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி பெற்றுக்கொண்டார். இந்த 'சிஹாரா' விருதின் மூலம் இந்தியாவின் சுற்றுலாத்துறையில், ராமோஜி ஃபிலிம் சிட்டியின் முதன்மையான அணுகுமுறை கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கர்நாடகா சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேசும் போது ,”கன்னடத்தில் ஷிரா என்றால் இனிப்பு என்று பொருள், தென்னிந்திய ஓட்டல் சங்கம் இனிப்பு பதார்த்தத்தை போல் இனிப்பானது. பயணம் செய்வது தான் மனித இயல்பு, கல்வி, உணவு, வேலை என பல காரணங்களுக்காக மனிதர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.
பல்வேறு இடங்களுக்கு சென்று அந்த சூழலுக்கு தங்களை மாற்றி் கொள்கின்றனர். அது தான் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதனை வலிமையாக காட்டுகிறது. பல காரணங்களுக்காக மனிதர்கள் பயணம் மேற்கொள்கின்றனர், அதனால் விருந்தோம்பலுக்கான தேவையும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது” என்றார்.
ராமோஜி ஃபிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி பேசுகையில்,”ராமோஜி ஃபிலிம் சிட்டி சார்பில் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறுவது எனக்கு கிடைத்த பெரிய கௌரவம். திரையுலக நட்சத்திரங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், கார்ப்ரேட் நிறுவனங்கள் என அனைவரும் அனுபவிக்கும் வகையில் ஒரு திரைப்பட உலகை உருவாக்க வேண்டும் என இருபது ஆண்டுகளுக்கு முன் எங்கள் சேர்மன் ராமோஜி ராவ் பேசிய போது அது சாத்தியமில்லாத கனவாக தோன்றியிருக்கும்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்காக இந்த மாயாஜாலத்தை ஏற்படுத்திய பின் தென் இந்தியா வழங்கும் சிறந்த விருந்தோம்பல் விருதைப் பெற்று அவர் கனவை நிறைவேற்றியுள்ளோம் என நாங்கள் நம்புகின்றோம். சிறந்த விருந்தோம்பல் என்றால் என்ன என மறுவரையறை செய்யும் அளவிற்கு மேலும் சிறப்பாக உழைப்போம். விருது வழங்கும் குழுவிற்கும், இந்த பயணத்தில் எங்களுடன் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: ராமோஜி ராவ் லட்சக்கணக்கான மக்களுக்கு இன்ஸ்பிரேஷன்... அமித்ஷா பாராட்டு...