காசியாபாத் : ஒருங்கிணைந்த பாரதிய விவசாய சங்கங்களின் செய்தித் தொடர்பாளரும், விவசாய சங்கங்களின் தலைவருமான ராகேஷ் திகைத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக உத்தரப் பிரதேச காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத்துக்கு அலைபேசியில் மிரட்டல் ஒன்று வந்தது. இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கௌசாம்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கொலை மிரட்டல்
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து காவல் நிலைய பொறுப்பாளர் சச்சின் மாலிக் கூறுகையில், “அலைபேசியில் தொடர்பு கொண்டு ராகேஷ் திகைத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அலைபேசி எண், அது எங்கிருந்து பேசப்பட்டது, கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அலைபேசியில் பேசிய நபர் முதலில் ராகேஷ் திகைத்தை அவதூறாக இழிவாக பேசியுள்ளார்.
புகார்
அதன்பின்னர் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இது குறித்து ராகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியவர் ராகேஷ் திகைத்.
3 வேளாண் சட்டங்கள் வாபஸ்
இதையடுத்து மத்திய அரசு சர்ச்சைக்குள்ளான அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தச் சட்டங்கள் தொடர்பான தெளிவான புரிதலை விவசாயிகளிடத்தில் ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருந்தாலும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.
விவசாய சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்! விவசாய பொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரணம், விவசாயிகளின் போராட்டத்தை நினைவு கூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்க நிலம் ஒதுக்க கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை தொடர்ந்துவருகின்றனர். இந்நிலையில் ராகேஷ் திகைத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி கோரிக்கை
முன்னதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று (டிச.4) செய்தியாளர்களை சந்தித்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்த விவசாயிகள் தொடர்பான தரவுகள் அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர் கூறியதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார். தொடர்ந்து, “நிவாரணம் கொடுக்க வழியில்லாமல் மத்திய அரசு பொய் சொல்கிறது, தரவுகள் இல்லாமலா வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றனர்” என்றும் கேள்வியெழுப்பினார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பிணி தீர்ந்தது, பணி தொடர்கிறது- வேளாண் சட்டங்கள் குறித்து ராகேஷ் திகைத்!