டெல்லி: 17ஆவது மக்களவையின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கியது. மக்களவையில் நடைபெற்ற கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வில் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேச தொடங்கினார்.
அப்போது எதிர்க்கட்சிகள் அவரை பேசவிடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, “பட்டியலின மக்கள் மற்றும் பெண்களுக்கு இதுவரை இல்லாத வகையில் இடமளிக்கப்பட்டுள்ளதை பொருத்துக்கொள்ள முடியாத எதிக்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன” என்று குற்றஞ்சாட்டினார்.
எனினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவரால் பேச முடியவில்லை. இதையடுத்து மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 12.34 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டவர்களை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு அமைதிப்படுத்த முயன்றார்.
எனினும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை, தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாகதிரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் விலையேற்றம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிதி வண்டியில் (சைக்கிள்) நாடாளுமன்றம் சென்றனர்.
இதையும் படிங்க : டெலிபோன் ஒட்டுக்கேட்பு- மோடி அரசுக்கு சு.சுவாமி எச்சரிக்கை!