டெல்லி:சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தினால் ஆண்டுதோறும் பழங்குடி கைவினை கலைஞர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் விதமாக ஹுனார் ஹாத் என்ற கண்காட்சி அமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியினை நாளை மறுநாள் (பிப். 21) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, கப்பல் துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா, எம்.பி. மீனாட்சி லேகி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தற்போது தொடங்கப்படவுள்ள இந்தக் கண்காட்சி நாட்டின் குரல் என்ற கருப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் தொடங்கும் இந்தக் கண்காட்சி வரும் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெறும். இதில், 31 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, இந்தக் கண்காட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. மக்கள் தங்களுக்குத் தேவையான கைவினைப் பொருள்களை வலைதளங்களின் வாயிலாகவும் வாங்கி வருகின்றனர். இதன் மூலம் களிமண், மர மற்றும் சணல் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் நேர்த்தியான தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது கண்டறியப்பட்டது. எனவே, இந்தக் கண்காட்சியில் இத்தகைய பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தின்போது, 7 லட்சத்து 50 ஆயிரம் கைவினைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.