டெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நாட்டின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு சிறந்த முறையில் ஆட்சி நடத்தியவர் என்றும் அவர் சிறிதுகாலம் மட்டுமே, பதவியில் இருந்தாலும், அளப்பரிய சாதனைகளை படைத்து உள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.
ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள், நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி உள்ளிட்டோரும், லடாக் பகுதியில் பாங்கோங் டிசோ ஏரிப் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவப் படத்திற்கு ராகுல் காந்தி மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் 25வது ராஜீவ் காந்தி தேசிய சாத்பாவனா விருது வழங்கும் விழா, டில்லியில் உள்ள ஜவஹர் பவனில் நேற்று (ஆகஸ்ட். 20) நடைபெற்றது. இந்த விழாவில் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரியங்கா காந்தி வாத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், 2020-21ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி தேசிய சாத்பாவனா விருதை, முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் குடியிருப்பு நிறுவனமான பனஸ்தலி வித்யாபீடத்திற்கு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சோனியா காந்தி கூறியதாவது, ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை கொடூரமாக நிறைவுற்று இருந்தாலும், அவர் குறுகிய காலத்தில் எண்ணிலடங்கா சாதனைகளை படைத்து உள்ளார்.