புதுடெல்லி: “பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்துவருகிறார். சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். குற்றத்தின் அளவில் எங்களுக்கு பாகுபாடு இல்லை” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு புதன்கிழமை (மே4) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் கே.எம். நடராஜ், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி, பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சங்கர நாராயணன் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியலமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின் கீழ் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்படுகிறார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த வாரத்துக்குள் மத்திய அரசு தனது முடிவை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறினர். முன்னதாக தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி, “பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசும், ஆளுநரும் மௌனம் காப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது” என்று வாதாடினார்.
அப்போது பேசிய நீதிபதிகள், “பேரறிவாளன் கருணை மனுவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்க முடியாது; இது நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம். ஆளுநரின் முடிவு அவசியமில்லை. அமைச்சர் குழுவின் முடிவுக்கு அவர் கட்டுப்படுகிறார். மத்திய அரசு வாதிட தயாரில்லையெனில் நாங்கள் பேரறிவாளனை விடுவிப்போம்” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, “20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவித்துள்ளோம் என்பதை நினைவுப்படுத்திய நீதிபதிகள் பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். குற்ற அளவில் எங்களுக்கு எந்தப் பாகுப்பாடும் இல்லை” எனவும் தெரிவித்தனர்.
மேலும், “ஆண்டுகள் பல சிறையில் இருந்ததால் அவருக்கு பலவிதமான உடல் உபாதைகள், நோய்கள் ஏற்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து பேரறிவாளன் தாக்கல் செய்த கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் வழக்குரைஞர் கூறினார். அப்போது, “இதுபோன்று ஏதாவது சாக்குப்போக்கு கூறுகின்றனர் என தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி கூறினார்.