ராஞ்சி:நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெளியானது முதல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெயிலர் வெளியான சமயத்தில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். வழக்கமாக தனது படம் வெளியாகும் சமயத்தில் இமயமலைக்கு செல்லும் ரஜினிகாந்த் கடந்த 4 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக இமயமலைக்கு செல்லவில்லை. அங்கு சில நாட்கள் தங்கியிருந்த பின் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வந்தார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அம்மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். பின்னர் பிரபல வழிபாட்டு தளமான சின்னமஸ்தா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.