ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்தவர் ஆரவ் குந்தல். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அந்த பள்ளியில் படிக்கும் கல்பனா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில் ஆரவ் குந்தல் வீட்டில் திருமணம் பேச்சு அடிப்பட்டது. அப்போது ஆரவ் தனது காதல் விவகாரம் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார். இருவரும் பெண் என்பதால் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆரவ் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, 2019ஆம் ஆண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆணின் நடை, உடை பழக்கத்தை கற்றுவந்தார். இந்த நிலையில் இருவருக்கும் நேற்று (நவம்பர் 7) திருமணம் நடந்து முடிந்தது.
இதுகுறித்து கல்பனா கூறுகையில், ”ஆரவ் குந்தல் பாலின அறுவை சிகிச்சை செய்யவிட்டாலும் திருமணம் செய்திருப்பேன். அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது அவருடன் இருந்தேன். இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார். இதுகுறித்து ஆரவ் குந்தல் கூறுகையில், ”எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியபோதே நான் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினேன். இப்போது எனது காதலியை கரம் பிடித்துவிட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் திருநங்கைகள் அல்லது திருநம்பிகள் தங்களது விருப்பத்தின் பேரில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வது அதிகரித்துள்ளது. இதற்காக மாநில அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் சம்மன் யோஜனா(samman yojana) திட்டத்தின் கீழ் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு செய்துகொள்ள விரும்புவோருக்கு ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் சிகிச்சை முற்றிலும் இலவசம். தனியார் மருத்துவமனைகளில் செய்துகொண்டால் அரசு ரூ.2.50 லட்சம் ரூபாய் வரை வழங்கும்.
இதையும் படிங்க:கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்