ராஜஸ்தான்:தேர்தல் நேரங்களில் ஆளும் கட்சிக்கு நெருக்கடி உண்டாக்கும் வகையில் எதிர்கட்சிகள் அவ்வப்போது விமர்சனங்களை வைப்பது அரசியல் வட்டாரங்களில் இயல்பான நடவடிக்கை. ஆளும் கட்சிகள் தேர்தல் நேரங்களில் பரப்புரைகளைக் கடந்து, பொது இடங்களிலும் தங்கள் கட்சி சார்ந்தவர்கள் பொது கருத்து தெரிவிப்பதில் அதீத கவனத்துடன் இருக்க வலியுறுத்துவர்.
பரப்புரைகளில் எதிர் கட்சியோ, ஆளும் கட்சியோ, பொது கருத்துகளை தெரிவிப்பதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு, தொடர்ந்து நீதிமன்றங்கள் வலியுறுத்தி வருகின்றன. பொது கருத்தில் சர்ச்சைக்கு உள்ளாகும் வீரியம் எதுவரையில் இட்டுச்செல்லும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் ராகுல் காந்தியின், மோடி குறித்த சர்ச்சை கருத்து அமைந்தது.
இத்தனை வீரியங்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்குவது சர்வசாதாரணமாகி விட்டது. வயநாடு எம்.பியான ராகுல் காந்திக்கு அடுத்து தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட். நீதிமன்றம் குறித்து அவர் தெரிவித்த கருத்தின் மூலம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், “இன்றைய காலகட்டங்களில் நீதிமன்றங்களில் ஊழல் தலைதூக்கியுள்ளது. மேலும் வழக்கறிஞர்களின் பணபலத்தால் தீர்ப்பு, அவர்களுக்கு ஏற்றவாரு நிறைவேற்றப்படுகின்றது" என்று கருத்து தெரிவித்தது நீதிமன்றம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பூதாகரமாகியுள்ளது.
இந்த கருத்திற்கு வழக்கறிஞர்கள் பலரும் அவர்களின் எதிர்பை தெரிவித்து நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்கள் குறித்து முதலமைச்சர் கூறிய கருத்துகளில் இருந்து பின் வாங்க வேண்டும் என்றும், இதற்காக அவர் அனைத்து வழக்கறிஞர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.