ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. விரைவில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தேர்தலுக்கு முன்பாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர் ராஜஸ்தான் மாநில சமூக நீதித் துறை அமைச்சகம் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான உத்தரவை பிறப்பித்து உள்ளது.
அண்மையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சாதி ரீதியிலான மக்கள் தொகையின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பீகாரைத் தொடர்ந்து ராஜஸ்தானும் சாதி வாரி கணக்கெடுப்பில் ஈடுபட்டு உள்ளது. அரசின் நிதியில் இருந்தும், அரசு ஊழியர்கள், மற்றும் அரசு சார்ந்த வளத்தை கொண்டும் இந்த சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கணக்கெடுப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பொது மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பின் மூலம் பின்தங்கிய மக்களுக்கு தேவையான சிறப்பு நலத் திட்டங்கள் உள்ளிட்டவைகளை எளிதில் மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டு உள்ளது.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பிற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆட்சியர் தலைமையில் நகராட்சி, நகர கவுன்சில், மாநகராட்சி, கிராம மற்றும் பஞ்சாயத்துகள் மூலம் பணியாளர்கள் எடுக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனிப்பட்ட முறையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு, படிவங்கள் உள்ளிட்டவைகள் அச்சடிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை ஒரிரு நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் ராஜஸ்தான் அரசின் இந்த சாதி வாரி கணக்கெடுப்புக்கு மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இதையும் படிங்க :அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு - முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!