ஜெய்ப்பூர் :200 தொகுதிகளை ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு இன்று (நவ. 25) ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடக்கிறது. மொத்தமாக ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில், கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வருகின்றனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51 ஆயிரத்து 756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
5 கோடியே 25 லட்சம் பேர் வாக்கு செலுத்த தகுதி பெற்றவர்கள், இதில் 2 கோடியே 73 லட்சம் பேர் ஆண்கள் என்றும் 2 கோடியே 52 லட்சம் பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓட்டுமொத்தமாக ஆயிரத்து 862 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டு உள்ளனர். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என 61 ஆயிரத்து 21 பேர் ஏற்கெனவே வீட்டில் இருந்தபடி வாக்களித்து விட்டனர்.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க, மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளது. 700 கம்பெனி துணை ராணுவப் படையினர், 120 கம்பெனி அதிரடி படையினர், ஊர்க்காவல் படையினர் 18 ஆயிரம் பேர், பிற மாநில ஊர்க்காவல் படையினர் 15 ஆயிரம் பேர், 70 ஆயிரம் போலீசார் என ஒரு பட்டாளமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 68 புள்ளி 25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அதன்பின் பெரிய அளவில் வாக்குகள் பதிவாகிவில்லை எனக் கூறப்படுகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஒட்டுமொத்தமாக 68 புள்ளி 50 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை மூடி சீல் வைத்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். வரும் டிசம்பர் 3ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மாலையே முழு முடிவுகளும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்; 40.27 சதவீத வாக்குகள் பதிவு!