டெல்லி: தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 9ஆம் தேதி) காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது, இது 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் அதிகப்பட்ச மழைப்பொழிவு என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நாட்டின் தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பல பகுதிகளிலும் மிதமானது முதல் மிக கனமழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரத்தில் அதிக தீவிர மழை பெய்யும் என்று IMD கணித்து உள்ளது.
யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், ஜூலை 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கனமழையைத் தொடர்ந்து தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்படும் பகுதிகளை மாநில அரசின் அனைத்து அமைச்சர்களும், மேயர்களும் ஆய்வு செய்ய வேண்டும். "அனைத்து துறைகளின் அதிகாரிகளும் களத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
வட இந்தியாவின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 9) பெய்த மழையால் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நிலச்சரிவுகளில் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. பழைய நீர்த்தேக்கங்கள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டன. ஹிமாச்சலப்பிரதேசம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஹிமாச்சலப் பிரதேசம்:ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பியாஸ் ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்து வருகிறது. இதில் 6 பேர் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாக்வைனில் சிக்கித் தவிக்கும் 6 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை, ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்ததால், மண்டியில் உள்ள பஞ்ச்வக்த்ரா பாலம் இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலம் அடித்து செல்லப்பட்டதாக மாண்டி கூடுதல் மாவட்ட நீதிபதி அஸ்வனி குமார் தெரிவித்து உள்ளார்.
இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி கனமழையால் சேதமடைந்த உனா-ஹோஷியார்பூர் சாலையில் உள்ள கலுவல் பாலத்தை ஆய்வு செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களுடன் பேசிய நிலையில், கனமழையால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து கேட்டறிந்த அமித் ஷா, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்ததாக, முகேஷ் அக்னிஹோத்ரி தெரிவித்து உள்ளார்.
பஞ்சாப்:பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூட அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ள நிலையில், ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
"பஞ்சாபில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், குறிப்பாக நதிகளை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமைச்சர்கள்-எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காவல் துறையினர் அனைவருக்கும், பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அறிவுறுத்தி உள்ளதாக'' பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ட்வீட் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: West Bengal Panchayat Election: 696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - அமித் ஷாவை சந்திக்கிறார் ஆளுநர்!