சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்பட்ட பல வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலின் நிறம் வெள்ளையாக இருந்து வந்த நிலையில், சோதனை முறையில் அதனை மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 28வது வந்தே பாரத் ரயில் வெள்ளையிலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் இருந்தால், அதிகம் அழுக்காவதால் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று(ஜூலை 8) சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காவி நிற வந்தே பாரத் ரயிலையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "நாட்டின் 28வது வந்தே பாரத் ரயில் காவி நிறத்தில் இருக்கும். மூவர்ணக் கொடியினால் ஈர்க்கப்பட்டு இந்த நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டவை. இந்தியாவில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை வடிவமைத்துள்ளனர். வந்தே பாரத் ரயில்களில் Anti climbing device என்ற பாதுகாப்பு அம்சம் உள்பட பல புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார்.