புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லி மாநில அரசின் சட்டத்தை மாற்றி மத்திய அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. டெல்லி அமைச்சரவை எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் அனுமதியில்லாமல் நடைமுறைப்படுத்தக்கூடாது என அந்தச் சட்டம் சொல்கிறது. டெல்லி யூனியன் பிரதேச சட்டம் ஷரத்து 4ல் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதன் காரணமாக, தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமையை பறித்துவிட்டார்கள்.
இதன்படி, எம்எல்ஏக்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, ஆளுநர் துணையில்லாமல் எதுவும் செய்ய முடியாது. இதேநிலை பாஜகவால் வெகு விரைவில் புதுச்சேரிக்கும் ஏற்படும். எனவே புதுச்சேரி மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். டெல்லியை போல சட்ட மாற்றத்தை இங்கும் கொண்டு வந்தால் புதுச்சேரியின் அதிகாரம், முழுமையாக பறிக்கப்படும். எனவே மாநில அந்தஸ்து பெறுவதை தவிர வேறு வழியில்லை.