சென்னை: தனது அரசியல் வாழ்வில் இரண்டு முறை தகுதி இழப்பை சந்தித்தவர் ஜெயலலிதா, மாட்டுத்தீவன ஊழல் புகாரால் மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், இதே அவதூறு வழக்கில் சிக்கி 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இன்னும் வரலாற்றில் பின்னோக்கி சென்றால் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி கூட 1975 ம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தான்.
இருந்தாலும் ஜெயலலிதாவின் வழக்குகள் தனித்துவமானவை, 1992 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அப்போது அரசு பொதுத்துறை நிறுவனமான டான்சியின் நிலத்தை முறைகேடாக வாங்கியதாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டு 2000ம் ஆண்டில் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் ஏற்கெனவே 1996ம் ஆண்டு தேர்தலில் தோற்றிருந்த ஜெயலலிதாவுக்கு, 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது.
ஆனாலும் தேர்தலில் அதிமுக ஜெயித்தால் எம்எல்ஏவாக தேர்வாகாமலேயே முதலமைச்சரானார். இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் , ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சராக்கிவிட்டு பதவி விலகினார் ஜெயலலிதா. இதன் பின்னர் மூன்றே மாதங்களில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்ததால், ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று முதலமைச்சரானார்.
வரலாறு மீண்டும் திரும்புவது போல சொத்துக்குவிப்பு வழக்கில் 2015ம் ஆண்டு மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்த போது முதலமைச்சராக இருந்தார் ஜெயலலிதா. அப்போதும் தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி இழந்ததோடு சிறை செல்லவும் நேரிட்டது. இப்போதும் முதலமைச்சராகும் வாய்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு 2வது முறையாக கிடைத்தது. இருப்பினும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜான் மைக்கேல் டி குன்ஹ அளித்த தீர்ப்பை ரத்து செய்ததால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அப்போது எம்எல்ஏவாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து, எஸ்.வளர்மதி எம்எல்ஏவாக தேர்வாகிவிட்டார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் ஜெயலலிதா. இதே போல ராகுல் காந்தியும் மேல்முறையீடு செய்து தகுதி நீக்கத்திலிருந்தும், தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையிலிருந்தும் வெளி வரலாம். ஆனாலும், எம்.பி. பதவி திரும்ப கிடைக்குமா என்பது பெரிய கேள்வி தான். எனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுமா? என்றும் சில குரல்கள் எழுகின்றன.