டெல்லி:சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசம், சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையை ஒட்டியுள்ளது.
இதனால், அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப்பிரதேசத்தை 'தெற்கு திபெத்' என்றும், கடந்த 1962ஆம் ஆண்டு போரின்போது இந்தியாவிலிருந்து ஆக்கிரமித்த பகுதிகளை 'அக்சாய் சின்' பகுதி என்றும் கூறி வருகிறது.
சீனா அருணாச்சலப்பிரதேசத்தை பெயரளவில் மட்டும் சொந்தம் கொண்டாடவில்லை, பல பகுதிகளை ஆக்கிரமித்து கட்டுமானம் கட்டுவது, ராணுவ முகாம்கள் அமைப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் சீனாவின் அத்துமீறலால் பதற்றங்கள் நிலவி வருகின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்த எல்லைப் பதற்றங்கள் அதிகரித்துவிட்டன. கடந்த 2021ஆம் ஆண்டு, அருணாச்சலப்பிரதேச எல்லையில் சீனாவின் கட்டுமானங்கள் இருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த புகைப்படத்தின்படி, இந்தியாவின் மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC)-க்கும் சர்வதேச எல்லைக்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா ஏராளமான வீடுகளை கட்டிருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அருணாச்சலப்பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் இணைய சேவை கொண்டு வருவது, சாலை போடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.