சத்தீஸ்கர்: ராய்ப்பூரில் 'அமர் ஜவான் ஜோதி' திட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிப்ரவரி 3ஆம் தேதி அடிக்கல் நாட்டுவார் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் நேற்று (ஜன 29) அறிவித்தார்.
இது குறித்து, பூபேஷ் பாகல் நேற்று (ஜன 29) தனது ட்விட்டர் பக்கத்தில், “பல தலைமுறைகளுக்கு இந்திய வீரர்கள் போரில் மரணம் அடைந்த தியாக வரலாறுகள் உத்வேகம் அளித்து வருகின்றன. ஆனால் நாட்டுக்காகப் போரிடாதோருக்கு இது பற்றி எதுவும் தெரியாது.
சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அமர் ஜவான் ஜோதி அமைக்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைய உள்ள இந்த அமர் ஜவான் ஜோதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டுவார்” எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும் இது தொடர்பாக பாகல் வெளியிட்டிருந்த அறிக்கையில், “அமர் ஜவான் ஜோதி 4ஆவது பட்டாலியன், சத்தீஸ்கர் ஆயுதப்படை மானா, ராய்ப்பூர் வளாகத்தில் கட்டப்படும். தியாகிகளின் நினைவாக சத்தீஸ்கர் அமர் ஜவான் ஜோதி தீபம் தொடர்ந்து ஏற்றப்படும். பிப்ரவரி 3ஆம் தேதி நினைவிடத்துக்கான பூமி பூஜை விழா நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு தியாக வரலாறு உண்டு. தேச சேவைக்காக தங்கள் அனைத்தையும் தியாகம் செய்த பல தலைசிறந்த தலைவர்கள் உள்ளனர். தியாகங்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது கட்சிக்கு தெரியும். தியாகிகளை மதிக்காத எந்த சமூகமும் இல்லை என்பதற்கு நமது சாட்சி எடுத்துக்காட்டாக உள்ளது.
1972 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி, டெல்லியில், வீரமரணம் அடைந்த வீர வீரர்களை போற்றும் வகையில், அமர்ஜவான் ஜோதியை ஏற்றி வைத்தார். ஆனால் ஜோதியை ஏற்றும் இடத்தினை மத்திய அரசு மாற்றியது. இந்தியா கேட்டில் அமர் ஜவான் ஜோதியின் நித்திய சுடர் பார்வையாளர்களுக்குத் தெரிந்தது மற்றும் நாட்டின் தியாகிகளுக்கு பெருமை மற்றும் நன்றியுணர்வை ஏற்படுத்தியது.