Rahul Gandhi Security Breach: ஹோசியார்பூர்(பஞ்சாப்):காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் திடீரென மர்ம நபர் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் பாதயாத்திரையை முடிக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு உள்ளார். கடந்த 14ஆம் தேதி லூதியானா அடுத்த பிள்லெளர் பகுதியில் சென்ற பாதயாத்திரையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.