சென்னை:2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி ஆகிய 3 பேரின் பெயர்களையும் திருடர்கள் உடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார். இதற்கு அப்போதே பாரதிய ஜனதா கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி என்பவர், மோடி குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்தார்.
இது தொடர்பான விசாரணை முடிவுற்ற நிலையில், நேற்று (மார்ச் 23) இந்திய குற்றவியல் சட்டம் 102 (1) (e)இன் கீழ் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 (3) என்ற பிரிவின்படி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட பிணைத் தொகையை செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது. அதோடு ராகுல் காந்தி உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று (மார்ச் 24) மக்களவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சூரத் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் செல்லும் வரை மக்களவை கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியாது. அதேநேரம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி காலியாகி விட்டது.