இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' இன்று (ஜன.14) ராகுல் காந்தி தொடங்கினார். இந்த யாத்திரை 67 நாட்களில் 100 நாடாளுமன்றத் தொகுதிகள், 110 மாவட்டங்கள் வழியாக 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிலோ மீட்டர் பயணம் செய்து மார்ச் 20ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முடிவடையவுள்ளது.
'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' தொடக்க நிகழ்வில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “2004ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். ஆனால் முதன் முறையாக இந்தியாவில் உள்கட்டமைப்புகள் சரிந்த இடத்திற்கு வந்துள்ளேன். 2023 ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிக்குப் பின்னர் மணிப்பூர் மாநிலம் பிளவுபட்டுள்ளது. இங்கு உள்ள மக்கள் பல்வேறு இழப்பினை சந்தித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தவர்களை இழந்துள்ளனர்.
ஆனால், மணிப்பூர் மாநிலம் மக்களின் கண்ணீரைத் துடைக்க, கரங்களைப் பற்றி ஆறுதல் கூற பிரதமர் வரவில்லை. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று. பிரதமர் மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மணிப்பூர் மாநிலம் இந்தியாவில் இல்லை என நினைக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. மணிப்பூர் மாநிலம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் வெறுப்பின் சின்னம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.