தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகப் போராட்டம் - டெல்லியில் தடையை மீறி போராட்டம்! - KC Venugopal

டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 26, 2023, 12:20 PM IST

டெல்லி:கடந்த 2019ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகா மாநிலம், கோலார் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார்.

“நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.

இதற்கு ராகுல் காந்தி தரப்பில், கருத்து மற்றும் பேச்சுரிமையால் பேசப்பட்டது என வாதிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள் காட்டி, ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் சங்கல்ப சத்யாகிரகப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டெல்லியில் காந்தியின் நினைவிடம் உள்ள ராஜ் காட் பகுதியில் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. சங்கல்ப சத்யாகிரகம் என்ற பெயரில் போராட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டு இருந்தன.

டெல்லி ராஜ்காட்டில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையினை காரணமாக காட்டி போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேசி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:அமெரிக்காவில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் முயற்சி - காலிஸ்தான் அமைப்பினர் கிளர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details