டெல்லி:நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ராகுல் காந்தி நேற்று (ஜூன் 13) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையில் ஆஜரானார். முதல்கட்டமாக மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு 8 மணி நேரம் விசாரணை தொடர்ந்தது.
இதனிடையே காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது என்று கருதப்பட்ட நிலையில், இன்றும் (ஜூன் 14) ஆஜராகும்படி அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது. அந்த வகையில் இரண்டாவது நாளாக ராகுல் காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு:யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல்காந்தி இருவரும் பங்குதாரர்களாக உள்ளதாகவும், இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, ஜூன் 8ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், சோனியாகாந்தி கரோனா காரணமாக, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டார். இதனால் ஜூன் 23ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதேபோல ராகுல்காந்திக்கு ஜூன் 8ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அவர் வெளிநாட்டிலிருப்பதாகக் கூறி விலக்கு கேட்டார். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் அளித்தது. அதன்படி நேற்று ராகுல்காந்தி ஆஜரானார். இன்றும் விசாரணை தொடர்கிறது.
இதையும் படிங்க:காவல் துறையினர் பிடித்து தள்ளியதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு