சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் "வாரீஸ் பஞ்சாப் டீ" என்ற அமைப்பை முன்னெடுத்து, காலிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர் அம்ரித்பால் சிங். இவரது உதவியாளர் லவ்ப்ரீத் கடந்த மாதம், கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆதரவாளர்களை திரட்டிய அம்ரித்பால் சிங், அஜ்னாலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.
வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திரண்ட அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். காவல்நிலையத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்தனர். இதில் போலீசார் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட லவ்ப்ரீத்தை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, லவ்ப்ரீத்தை போலீசார் விடுவித்தனர்.
எனினும், அம்ரித்பாலை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். நேற்று (மார்ச் 18) பாதுகாப்பு வாகனங்களுடன் சென்ற போது அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரங்களை சிலர் பரப்ப வாய்ப்புள்ளதால், நேற்று மாநிலம் முழுவதும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.