புதுச்சேரி: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற உழவர்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன், திருபுவனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அங்காளன், ஏனம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாஸா அசோக் ஆகியோர் பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி திடீரென்று அக்கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.
அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தை பலனளிக்காததால் மேலிடத்தின் உத்தரவின்பேரில் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஈடுபட்டார்.
இதனையடுத்து இன்று (பிப்ரவரி 9) புதுச்சேரி மாநில மேலிடப் பொறுப்பாளர், மத்திய அமைச்சர் ஆகியோர் புதுச்சேரி அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சமாதானப்பேச்சு நடத்த உள்ளனர்.
இது குறித்து துணைநிலை ஆளுநரை நேற்று (பிப்ரவரி 8) சந்தித்த சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கொடுத்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்றால் உங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த சிவசங்கரன்,
எங்களது கோரிக்கையைப் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார்கள். மேலும் இது சம்பந்தமாக நாளை (பிப்ரவரி 9) மத்திய அமைச்சர், மேலிடப் பொறுப்பாளர்களுடன் புதுச்சேரியில் பேச்சு நடத்த உள்ளனர். அதன்பிறகு எங்களது முடிவைத் தெரிவிப்போம் என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆந்திர வாழ் தமிழ் மாணவர்களுக்கு இலவச தமிழ் புத்தகம் - ஸ்டாலினுக்கு நடிகை ரோஜா நன்றி