புதுச்சேரி:புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (மார்ச் 26) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ”காங்கிரஸ்-திமுக ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரிக்கு 8 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேகதாது அணை கட்டுவதை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியின்போது ஒருமனதாக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்
எனவே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை உடனடியாக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையை கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், நடப்பு மக்களவைக் கூட்டத் தொடரிலேயே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை முன்னாள் கவர்னர் கிரண்பேடி மீறியதாக நீதிமன்றத்தில் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது என்றும், இந்த வழக்கு விசாரணையின்போது தான் நீதிமன்ற உத்தரவை மீறி இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக நீதிமன்றத்திற்க்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்த நாராயணசாமி இதிலிருந்து அவர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் என்பதும் தெளிவாகி உள்ளது என்று குறிப்பிட்டார்.