புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ புதுச்சேரி:அமைச்சர் சந்திர பிரியங்காவை தகுதி நீக்கம் செய்து அனுப்பிய கடிதத்தை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, “புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சந்திர பிரியங்காவை தகுதி நீக்கம் செய்து அனுப்பிய கடிதத்தை, உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ளது. இதை வைத்து பாஜக நாடகம் நடத்துகிறது. முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜக இந்த வேலையை செய்து வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால், முதலமைச்சரின் கடிதம் உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்படவில்லை. இந்த நாடகத்தை பாஜக முழுமையாக அரங்கேற்றி வருகிறது. புதுச்சேரியில் இருக்கும் சபாநாயகர், பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு ஆதரவாக இருப்பதுபோல் நடித்துக் கொண்டு, முதலமைச்சர் அனுப்பிய கோப்பினை நிராகரித்து இரட்டை வேடம் போடுகிறார்கள்.
இதையும் படிங்க:சென்னை கொளத்தூரில் ரூ.3.84 கோடியில் விளையாட்டு திடல்: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
அதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சரைச் சந்தித்து தங்களது கடிதத்தை ஏற்றுக் கொள்ளாத பாஜகவில் இருந்து கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர். இதில் அவர்களும் நாடகம் நடத்துகிறார்கள். இவர்கள் இருவரும் திரைமறைவில் நாடகம் நடத்தியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைத் தூண்டி விடுவது, முதல்வர் ரங்கசாமி. இருவரையும் கோரிக்கை வைக்க வைத்துவிட்டு, முதலமைச்சர் வேடிக்கை பார்த்து வருகிறார். சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர், முதலமைச்சர் பதிவிக்கு தகுதி இல்லாதவர். ஒரு முதலமைச்சருக்கு அமைச்சரை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் உண்டு.
அந்த அதிகாரத்தில் உள்துறை அமைச்சகம் நேரடியாக ஈடுபட்டுள்ளது. எனவே, முதலமைச்சர் பதவியில் ரங்கசாமி நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். ஒரு நிமிடம் கூட ரங்கசாமி முதலமைச்சராக நீடிக்கக் கூடாது. எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் அவருக்குள்ள மரியாதையாக இருக்கும்” என கூறி உள்ளார்.
இதையும் படிங்க:21 குண்டுகள் முழங்க பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம்.. ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கண்ணீர்