புதுச்சேரி: மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தும், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, அதனை கொண்டாடும் வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேச காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் அலுவலகம் அருகே முதலமைச்சர் நாராயணசாமி பட்டசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய போது 61 விவசாயிகள் உயிரிழந்தனர். இதற்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு வரவேற்கத்தக்கது, பாராட்டுதலுக்குரியது.