புதுச்சேரி:ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை சார்பில் தடுப்பூசி விழிப்புணர்வு வாகனத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
ஆளுநர் மாளிகை எதிரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், நாட்டுப்புற கலைஞர்களின் நடனத்துடன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
100 விழுக்காடு இலக்கு
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரியில் தடுப்பூசி போட தகுதி உள்ளவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் இதுவரை 7.50 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.
பள்ளி, கல்லூரிகள், கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருந்தாலும் 100 விழுக்காடு இலக்கை எட்ட முடியவில்லை.
தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு 100 விழுக்காடு இலக்கை அடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, ஒன்றிய செய்தி ஒலிபரப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தேன்.
தடுப்பூசி நம்மை காக்கும்
தடுப்பூசி ஒன்றுதான் மூன்றாவது அலையிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது அலை வருவது தடுக்க முடியாதது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ள புதுச்சேரி அரசும் தயாராக உள்ளது.
மேலும் 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மக்களையும் மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக்கூடியது. சுமார் 700 கோடியில் கூடுதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது மக்களுக்குத் தேவையான நல்ல பட்ஜெட்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓஎம்ஆர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது- எ.வ.வேலு