புதுச்சேரி: உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஒன்றிய அரசு ரத்து செய்யக்கோரி புதுச்சேரி மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக காங்கிரசார் பெட்ரோல் நிலையம் முன்பு கையெழுத்து இயக்கம் என்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (ஜூலை 9) புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில், அரசு கூட்டுறவு பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் டீசல் கேஸ் விலையை கண்டித்து போராட்டம் இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன், ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்தும்; விலை உயர்வை திரும்பப் பெற கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது திடீரென இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அதனை சவ வண்டியில் வைத்து, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் இழுத்துச்சென்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், கரோனா காரனமாக பொது போக்குவரத்து இயங்காததால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை அதிக அளவில் பயன்படுத்திவரும் இந்த சூழலில், அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெட்ரோல் விலையை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும்; மத்திய அரசு காது இருந்தும் செவிடாகவும், கண் இருந்தும் குருடாகவும் இருந்து மக்களின் துயரத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: திருடுபோன இரு சக்கர வாகனம் - 24 மணி நேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்