புதுச்சேரியில் பெரும்பாலும் அரசு பள்ளிகள் ஆண்டுதோறும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் வருமானமின்றி தவிக்கின்றவேளையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி மாணவர்களின் பெற்றோர்களை வற்புறுத்தி வருகின்றன.
இதனால் வருமானமின்றி தவித்துவந்த பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் ஆண்டு தோறும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வரும் மங்கலம் தொகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.
இதனையடுத்து பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுடைய ஏற்பாடுபடி மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர வந்த பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் மரியாதை செலுத்தினர். மாணவர்களுக்கு புத்தகம், பரிசு பொருள்களையும் வழங்கி வரவேற்றனர். இதனால் நெகிழ்ந்துபோன பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.