சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பெச்சபால் (Bechapal) கிராமத்தில், பொதுமக்களின் அனுமதியின்றி காவல்துறையினர் முகாம் அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, கடந்த பல மாதங்களாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்றும் (மார்ச் 24) ஏராளமான மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகாம் அமைத்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பது உள்ளிட்ட பல்வேறு அட்டூழியங்களை காவல்துறையினர் தொடர்ந்து செய்து வருவதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நக்சலைட்டுகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள் எனக் கூறி, சிறுவர்களை காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.
போராட்டம்:அதேபோல், பைலடிலா மலைக்கு அருகில் அமைந்துள்ள சுரங்கத்திலிருந்து இரும்புத்தாது எடுப்பதற்காக, அரசு பெரிய அளவில் சாலைகளை அமைத்து வருவதால் தங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்றும், தேவைக்கு ஏற்றார்போல் சிறிய சாலைகளை அரசு அமைத்தால் போதுமானது என்றும் தெரிவித்தனர்.