டெல்லி :இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பெண் மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோரால் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வீரர், வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரிக்க மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகளிடம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து வீரர், வீராங்கனைகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதனிடையே மேரி கோம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு முழுமையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்கள் கடந்தும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த வாரம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் புகார் தெரிவித்த காரணத்திற்காக தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வீரர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.