டெல்லி : மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அவையில் இல்லாத நிலையில், விளையாட்டு வீராங்கனையும் எம்.பியுமான பி.டி. உஷா அவையை வழிநடத்தினார்.
கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவையை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரும் வழிநடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் இல்லாத நேரத்தில் அவையை வழிநடத்தும் பொறுப்புக்கு நாடாளுமன்றக் அலுவல் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், துணைத் தலைவர்கள் குழு என அழைக்கப்படுவர். நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடருக்கான துணைத் தலைவர்கள் குழுவில், ஒலிம்பிக் நடசத்திரமும், தடகள வீராங்கனையுமான பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக் கூட்டத் தொடரின் 10வது நாளில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அவையில் இல்லாமல் போனார்.
இதையடுத்து முதல் முறையாக மாநிலங்களவையை பி.டி. உஷா அவையை வழிநடத்தினார். அவை நடவடிக்கைகளை கண்காணித்த பி.டி. உஷா, உறுப்பினர்களின் கலந்துரையாடல் மற்றும் விவாதங்களை நேர்த்தியாகவும், வசதியாகவும் கையாண்டதை காண முடிந்தது. முன்னதாக அரசியலில் சேர விருப்பமில்லை என் தெரிவித்த பி.டி. உஷா, கடந்த 2016 ஆம் ஆண்டு கேரளா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைவர்கள் களமிறங்குவதற்கு மத்தியில் கோழிக்கோட்டில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்த பி.டி. உஷா, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.டி. உஷா மாநிலங்களவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்து இருந்தார். அதேநேரம், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும் பி.டி. உஷா இருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், இந்திய மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கின் பாலியல் புகார் விவாகரத்தில், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக் களத்தில் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை பி.டி. உஷா சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க :Haryana violence: உயிரிழப்பு 6ஆக உயர்வு.. 116 பேர் கைது.. குற்றவாளிகள் தப்ப முடியாது - முதலமைச்சர்!