Priyanka Gandhi: பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வாக்கு அறுவடைக்குத் தேவையான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அடிக்கடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிடோர் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு ஈடாக காங்கிரஸ் கட்சி வேரூன்றி காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் அரசியல் பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.
மறுபுறம் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் திட்டத்துடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலத்தை ஆளும் திட்டத்துடன் பா.ஜ.க. பல்வேறு கவர்ச்சிகரத் திட்டங்களை அண்மைக் காலமாக அறிவித்து வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு பேலஸ் கிரவுண்ட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் "நான் தலைவி" என்ற மெகா பெண்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். முன்னதாக விமான நிலையம் வந்த பிரியங்கா காந்திக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. கே. சிவகுமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.