புதுச்சேரி:சர்தார் வல்லபாய் பட்டேலின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தின நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்றார். அவரை சிறைக் கைதிகள் பூக்களை தூவி வரவேற்றனர்.
இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்தை துணை நிலை ஆளுநர் திறந்து வைத்தார். பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 147 வகையான மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிகளால் உருவாக்கப்பட்ட திராட்சைத் தோட்டத்தை பார்வையிட்ட ஆளுநர், கைதிகளை வெகுவாக பாராட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்று முக்கியமான தினம். சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 வது பிறந்த தினம். இன்று (அக் 31) என்னுடைய திருமண நாள். காலையில் கோயிலுக்குச் சென்று மணக்குள விநாயகரை தரிசித்து விட்டு, படைத்தவனை பார்த்துவிட்டு இங்கு படைப்பாளிகளை பார்க்க வந்துள்ளேன்” என்றார்.
இதன் பிறகு மாற்றுத்திறனாளிகளின் யோகாசன நிகழ்ச்சியை பார்வையிட்ட துணை நிலை ஆளுநர், யோகா செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறச் சென்றபோது, அங்கு இருந்த தண்டனை காலம் முடிந்து சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் 20க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகள் ஆளுநர் தமிழிசை வரும் வழியில் மண்டியிட்டு, “எங்களை மன்னித்து விடுதலை செய்யுங்கள்” என காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர்.