டெல்லி:நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் இன்று (பிப்.8) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை வழங்கினார்.
நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த பிரதமர், வெளிர் நீல நிறத்தில் கோட் அணிந்திருந்தார். இதில் என்ன சிறப்பம்சம் என்றால், பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை (PET Bottles) மறுசுழற்சி செய்து அதன் மூலம் இந்த கோட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்துள்ள இந்த கோட், கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார விழாவில் பங்கேற்ற பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த ஆடையைப் பிரதமர் மோடி அணிந்து வந்தார்.
புதிய ஆடை குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''உபயோகம் இல்லாத 20 மில்லியன் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் எங்கள் நிறுவன முன்களப் பணியாளர்களுக்கு ஆடைகள் தயாரிக்க உள்ளோம். 'பிளாஸ்டிக் இல்லாத பசுமையான எதிர்காலத்தை நோக்கி' என்ற பெயரில், வரும் நவம்பர் மாதம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியன் ஆயில் எரிபொருள் நிரப்பும் மையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக 3 லட்சம் ஆடைகள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக ஊழியர்களுக்கு பிரத்யேக ஆடைகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆடைகளுக்கான மூலப்பொருட்கள், பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் போது கிடைக்கும் பாலியெஸ்டரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 450 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன" எனக் கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் இருந்து செய்யப்பட்ட ஆடையை பிரதமர் மோடி, நாடாளுமன்றத்துக்கு அணிந்து வந்தது கவனம் பெற்றுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை - பிரதமர் மோடி