டெல்லி: கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "மக்கள் அனைவரும் கரோனா வைரசின் பாதிப்புகளில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும்போது மத்திய அரசும் பாஜகவினரும் தேர்தல் பரப்புரையில் தங்களது நேரத்தை விரயமாக்குகின்றனர்.
மக்கள் முன் வாருங்கள்
அவர்கள் பரப்புரை மேடைகளிலிருந்து மக்களைப் பார்த்து சிரிக்கின்றனர். மக்களோ நோய்த் தொற்று அச்சத்திலும், வாழ்வாதாரத்தை எண்ணியும் அழுகின்றனர். அரசின் உதவிக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புகின்றனர்.
ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகளைத் தேடி அலைகின்றனர். நீங்கள் பெரிய பேரணிகளை நடத்துகின்றீர்கள்; அங்கே சிரிக்கிறீர்கள். அது உங்களால் எப்படி முடிகிறது.
பிரதமர் பரப்புரைகளைத் தவிர்த்து மக்கள் முன் வர வேண்டும். அவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். மக்களின் உயிரைக் காக்க என்ன செய்யப் போகிறார் என்பதனை விளக்க வேண்டும்.
முன்னுரிமை பெறாத இந்தியர்கள்
மத்திய அரசு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆறு கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் நாட்டில் மூன்று முதல் நான்கு கோடி இந்தியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதற்கு முன் இந்தியர்கள் ஏன் முன்னுரிமை பெறவில்லை?
திண்டாடும் மக்கள்
மத்திய அரசின் மோசமான திட்டமிடல் காரணமாகவே தடுப்பூசி பற்றாக்குறை, ரெம்டெசிவிர் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. இது அரசின் தோல்வி.
அக்டோபர்- நவம்பர் மாதங்களுக்குள் ஐந்து கோடி மக்கள் கரோனா வைரசுடன் தொடர்பில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. எனவே கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் உத்தரப் பிரதேச அரசு ஆர்டி-பிசிஆர் சோதனைகளைக் குறைத்து ஆன்டிஜென் சோதனைகளைச் செய்கிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட இந்த ஆன்டிஜென் சோதனைகள் செய்யப்படுகின்றனவா?
மக்களுக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் தனியார் பரிசோதனைகளை நிறுத்த அழுத்தம்
இதுதவிர தனியார் ஆய்வகங்கள் கரோனா பரிசோதனை செய்வதை நிறுத்துமாறும் அரசு கூறுவதாக இன்றும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. மக்களின் வாழ்க்கையைவிட எண்கள் உங்கள் அரசுக்கு உருவத்தை அளிக்குமா?" எனக் காட்டமாகkd கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:'ஐஎஸ்ஐ உடன் பேச முடிந்த அரசால் எதிர்க்கட்சிகளுடன் பேச முடியவில்லையா?'