பெங்களூரு : இந்தியாவில் இருந்து கர்நாடகாவை பிரிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். 224 தொகுதிகளை கர்நாடக சட்டமன்றத்திற்கு மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் கடைசி கட்ட அதிதீவிர பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. பாஜக சார்பில் பிரதமர் மோடி பெங்களுரூவில் பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்த்தினார்.
வழிநெடுக பிரதமர் மோடி மீது பூக்களை தூவி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டில் இருந்து கர்நாடகாவை பிரிக்க வேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுவதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.
கர்நாடகவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் அனுமதிக்காது என்று காங்கிரஸ் கூறியதாகவும், தேச விரோத சக்திகள் காங்கிரஸின் உயர்மட்டத்தை எட்டி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படும் போது, காங்கிரஸின் குடும்பம் முன்னணியில் இருக்கும் என்றார்.
மேலும் தான் இங்கு ஒரு தீவிரமான விஷயத்தைப் பற்றி பேச விரும்புவதாகவும் தன் இதயத்தில் நிறைய வலிகள் இருப்பதால் அதைச் சொல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் குடும்பம், நாட்டின் அரசியலில் செல்வாக்கு செலுத்த, வெளிநாட்டு சக்திகளை தலையிட ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவை வெறுக்கும் வெளிநாட்டு தூதர்களை காங்கிரஸ் ரகசியமாக சந்திப்பதாகவும், தேசத்தின் இறையாண்மையை அவமதிக்கும் செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவதாகவும், அதற்காக அவர்கள் வெட்கப்படவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த கர்நாடக தேர்தலில், காங்கிரஸ் குடும்பம் எல்லா வரம்புகளையும் உடைத்து, நாட்டின் உணர்வுகளை நசுக்கி ஒரு படி மேலே சென்றுள்ளது மோடி தெரிவித்தார்.