கொச்சி : நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம், கேரளாவுக்கான முதல் வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி கேரளாவில் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கேரளா சென்றார். மத்திய பிரதேசத்தில் இருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று (ஏப். 24) மாலை பிரதமர் மோடி கேரளா வந்தார்.
கேரள பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வேஷ்டி சட்டையுடன் பிரதமர் மோடி வந்தார். கொச்சி கடற்படை தளத்தில் ஊர்வலமாக வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு மருங்கிலும் நின்று கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடியும் காரில் நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து 2வது நாளாக திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடி கேரள மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் - காசர்கோடு இடையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து கொச்சி சென்ற பிரதமர் மோடி தெற்கு ஆசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து துறையின் அடுத்த அத்தியாயம் எனக் கூறப்படும் இந்த திட்டம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கேரளாவின் கனவுத் திட்டம் என இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டு இருந்தார்.