டெல்லி: டெல்லி - காசியாபாத் - மீரட் நகரங்களுக்கு இடையேயான ரேபிட் எக்ஸ் (RAPID X) அதிவேக ரயிலை உத்திரபிரதேசத்தின் சாஹிபாபாத் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.20) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை நாளை (அக். 21) முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளது.
உத்திரபிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட் எக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி - காசியாபாத் - மீரட் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System) துவங்கப்பட்டதை குறிக்கும் வகையில் சாஹிபாபாத் மற்றும் துஹாயை ரயில் நிலையங்களுக்கு இடையே ரேபிட் எக்ஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி ரயிலில் பயணித்தார். மேலும், ரயிலில் பயணித்த பள்ளி மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
சாஹிபாபாத் மற்றும் துஹாய் இடையே சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் உள்ளன. முன்னதாக வியாழக்கிழமை (அக்.19), மத்திய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி RRTS ரயில்கள் 'நமோ பாரத்' (NaMo Bharat) என்று அழைக்கப்படும் என்று அவரது X சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவரது X சமூக வலைத்தள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி - காசியாபாத் - மீரட் இடையிலான ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தின் துவக்கமாக சாஹிபாபாத் - துஹாய் டிப்போ இடையிலான நமோ பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் மணிக்கணக்கில் மேற்கொள்ள வேண்டிய பயணம் நிமிடங்களில் முடிந்து விடும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த ரயில் சேவை குறித்து தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தின் (NCRTC) அதிகாரிகள் கூறியதாவது, “ஒவ்வொரு ஆர்ஆர்டிஎஸ் ரயிலிலும் ஒரு மருத்துவ ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலியை பொருத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு பொதுப் பெட்டி இருக்கும், இந்த அம்சம் மருத்துவ கவனிப்பு தேவைப்படுபவர்களுக்கு பயணத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
8 மார்ச் 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட டெல்லி - மீரட் - காசியாபாத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் திட்டம், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்துடன் டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பதாகும். என்சிஆர்டிசி இணையதளத்தின் தகவல்படி, ரேபிட் அக்ஸ் ரயிலின் வடிவமைப்பு வேகம் மணிக்கு 180 கிலோமீட்டர்கள் ஆகும். மேலும் தற்போது இயக்க வேகம் மணிக்கு 160 கிமீ ஆகும்.
இதையும் படிங்க: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கனவுத் திட்டம்.. நாளை நடக்கவிருக்கும் சோதனைகள் குறித்த முழு விவரம்!