டெல்லி: 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஒட்டு மொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்த இந்த விழாவில், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, சிறந்த ஆவண குறும்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற இந்த இந்த விருது விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியா தரப்பில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விருது வழங்கும் கமிட்டியில் உறுப்பினராக உள்ளார். மேலும் ஆர்ஆர்ஆர்(RRR) திரைப்படத்தின் இயக்குனர் ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவப்பு கம்பள விரிப்பு அலங்கரித்தனர்.
இந்தியாவில் இருந்து ஆவண குறும்படத்திற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் (the elephant whisperers) குறும்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானையை முதுமலையைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி என்ற பழங்குடியின தம்பதி பராமரிப்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்.
அதேபோல் ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதில் துரதிர்ஷ்டவசமாக குறும்படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ஆல் தட் ப்ரீத்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. சினிமாவின் உச்சபட்சம் எனக் கூறப்படும் ஆஸ்கர் விருதை வென்றவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.