டெல்லி : தேசிய வளர்ச்சி திட்டக் குழுவான நிதி ஆயோக்கின் ஆண்டுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் மத்திய திட்டக் குழு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த குழு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கூடி நாட்டின் வளர்ச்சி குறித்த பணிகளை ஆலோசித்து அதற்கான திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப் படுத்தும் பணியில் ஈடுபட்டன.
இதையே ஐந்து ஆண்டு திட்டம் என அழைக்கப்பட்டது. முக்கோண வடிவில் இதன் நடைமுறைப் பணிகள் கணிக்கப்பட்ட நிலையில் மேல் இருந்து கீழ் நிலையில் இயங்கக் கூடிய அமைப்பாக இந்த குழு இயங்கி வந்ததாக சொல்லப்பட்டது. முக்கிய உறுப்பினர்கள் கொண்ட குழு கூடி மேற்கொள்ளும் திட்டங்களை அடுத்த ஐந்து ஆண்டுக்கு மாநில அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் படி அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் நிலவியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, நிதி ஆயோக் எனப்படும் தேசிய வளர்ச்சித் திட்டக் குழு அமைக்கப்பட்டது. அரசியலமைப்புச் சாராத அமைப்பாக இந்த குழு நிரவகிக்கப்பட்டது.
பிரதமர் மோடி இந்த குழுவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். நிர்வாக பிரச்சினைகளை குறைக்கும் முடிவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இந்த குழுவின் கூடுதல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் மாநில அரசின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், அந்தமான நிக்கோபார் தீவுகளின் சிறப்பு பிரதிநிதிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.