டெல்லி : வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் எல்லையை ஒட்டிய வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கm ஏற்பட்டது, இந்த நில நடுக்கத்தில் சிக்கி ஏறத்தாழ 300 பேர் வரை உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவு கோலில் 7ஆக பதிவானதாக மொராக்கோ நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
அதேநேரம் 6 புள்ளி 8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்தாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பழங்கால நகரமான மராக்கேவில் அதிகளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மராக்கே நகரில் இருந்த பழங்கால ரெட் வால்ஸ் கட்டடங்கள் இடிந்து சேதமானது தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நள்ளிரவு நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதால் பலர் தூங்கிக் கொண்டு இருந்த நிலையில், அதிகளவு உயிர் சேதம் நிகழ்ந்து இருக்கக் கூடும் என மொராக்கோ உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்னர்.
தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வீதிகளில் தஞ்சமடைந்த மக்களுக்கு தேவையாக உதவிகளை வழங்கி வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதனிடையே, மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், "இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது" என்று அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :Morocco earthquake : மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 300 பேர் பலி!