டெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை, "மஹாபரிநிர்வான் திவாஸ்"-ஆக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பலர் பங்கேற்று அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக பிரதமர் மோடி தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பியாக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர், சமூக நலனுக்காகப் போராடி, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனது வாழ்கையையே அர்ப்பணம் செய்த அழிவில்லா போராளி. அவரது மஹாபரிநிர்வான் நாளான இன்று, அவருக்கு எனது மரியாதையான வணக்கங்கள்" என்று தெரிவித்திருந்தார்.