ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியின் 74ஆவது பிரிவு இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி நேற்று (டிசம்பர் 27) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகின் மிகப் பெரிய மற்றும் துடிப்புமிக்க ஜனநாயக நாடான இந்தியாவை வலிமை மிக்கதாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றும் காவல் துறையின் பணிகளை போற்றுகிறேன். நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்காற்றிவருகிறது. பணியின்போது, தங்களது இன்னுயிரை தியாகம் செய்த காவல் துறை அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
காவல் துறை என்பது அரசின் மிக முக்கியமான அங்கம். காவல்துறை மக்களின் நம்பிக்கையை பெறும் போது அரசின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். கடைநிலையில் உள்ள காவலர் வரை அனைவரும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும். ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் தங்களது பணியை துவங்கும் போதிலிருந்தே தலைமைப் பண்புகளுடன் திகழ வேண்டும். தலைமைப் பண்பு திறன் மிகுந்த செயலாற்றலை உறுதி செய்யும். ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, துணிவு, திறமை மற்றும் உணர்திறன் ஆகிய 5 அடிப்படை பண்புகளை மனதில் வைத்து காவல் துறை அதிகாரிகள் தங்களது செயல்திறனை நிரூபிக்க வேண்டும்.