புதுச்சேரி:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வருகை தந்து உள்ளார். மைசூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்து, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர், இன்று (ஆகஸ்ட் 7) காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார். குடியரசுத்தலைவரை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்கின்றனர்.
மேலும், இரு நாள் அரசு பயணமாக புதுச்சேரி வரும் குடியரசுத்தலைவர் இன்று மற்றும் நாளை ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், முருங்கப்பாக்கம் கைவினை கிராமம் பார்வையிடுதல், மணக்குள விநாயகர் கோயில் மற்றும் திருகாஞ்சி கோயில்களில் வழிபடுதல், அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில்லில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பின்னர், நாளை மாலை 4:30 மணியளவில் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அதன் பின், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.
இந்த நிலையில், குடியரசுத்தலைவரின் வருகையையொட்டி, புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் செல்லும் சாலைகளின் இருபுறமும் சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே, இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல், டெல்லியிலிருந்து புதுச்சேரிக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளனர். குடியரசுத்தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தனர். மேலும், டெல்லி பாதுகாப்பு படையினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். பின், நேற்று காலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.