டெல்லி:நாடு சுதந்திரம் பெற்ற பின் தனியாக அரசியலமைப்பு தேவை என்பதால், சட்டமேதை அம்பேத்கரின் தலைமையில் அரசியலமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு உருவாக்குவதில் அவரது பங்கு அதிகமாக இருந்ததால், அவர் அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
1949ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 26ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,இந்திய அரசியலமைப்பு தினம் இன்று (நவ.26) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு தந்தையான அம்பேத்கரின் முழு உருவச் சிலை, உச்ச நீதிமன்ற வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்த நிகழ்வில் பங்கேற்று அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் லால் மேக்வால் ஆகியோர் அம்பேத்கரின் 7 அடி உயர சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நீதிபதி சந்திரசூட் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.